புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சீனாவுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு தரவுகளை மேற்கோள் காட்டி தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரிப்பதும், தரவு மையங்கள் கட்டுமானம் வேகமெடுப்பதும் மின்னணு பொருட்களுக்கான தேவையை உயர்த்தியதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த நிதியாண்டில் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ‘பிரின்டட் சர்க்யூட் போர்டுகள்’ (PCB) போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததன் மூலம் சீனாவுடனான வர்த்தகம் சுமார் ரூ.30,210 கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்–ஆகஸ்ட் காலகட்டத்தில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 15 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

அதே காலத்தில் இயந்திரங்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியும் சுமார் 21 சதவீதம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வரி கொள்கை மாற்றங்களும், சமீபத்திய ஏற்றுமதி உயர்வும் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவலாம் என ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த உயர்வு வர்த்தக ஏற்றத்தாழ்வை பெரிய அளவில் குறைக்கவில்லை. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 4.40 சதவீதமாக இருந்தது; அதற்கு முந்தைய ஆண்டில் அது 3 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் ரூ.12.50 லட்சம் கோடி மதிப்பிலான சீன பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. வரும் மாதங்களில் சீனாவுக்கான ஏற்றுமதி மேலும் உயரலாம் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.