ரோம்: இத்தாலியில் பள்ளிகளில் உடலை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சட்ட முன்மொழிவை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வலதுசாரி ஆதரவாளராகக் கருதப்படும் மெலோனி அரசு கல்வி மற்றும் குடியுரிமை உள்ளிட்ட துறைகளில் மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த அறிவிப்பும் அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

மேலும், வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு சட்டப்பூர்வமான உச்சவரம்பை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இத்தாலியில் வாழ விரும்புவோர் நாட்டின் மொழியை கற்று, சட்டத்திட்டங்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒரே வகுப்பில் பல மாணவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாத நிலை ஏற்பட்டால், மற்ற மாணவர்கள் தங்கள் சொந்த வகுப்பறையிலேயே சிறுபான்மையினர் போல உணர நேரிடும் எனவும் மெலோனி குறிப்பிட்டார்.

இந்த திட்டம் தற்போது சட்ட முன்மொழிவு மட்டுமே. இது விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்; ஒப்புதல் கிடைத்தால் 60 நாட்களுக்குள் பார்லிமென்ட் ஒப்புதலையும் பெற்ற பின்னரே சட்டமாக அமலுக்கு வரும்.