6 முதல் 8ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்ட ‘காமராஜர் காலை உணவுத்திட்டம்’ செப்.22 அன்று சென்னையின் திருவான்மியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’ முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு இதை 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும் விரிவாக்க முடிவு செய்து, திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்’ என மாற்றி அறிவித்துள்ளது.
தொடக்க விழாவில் முதல்வர் விஜய் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். மேலும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி, வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளில் பயிலும் கூடுதல் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடி 63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக ரூ.724 கோடி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.





