கர்நாடக சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில், அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாட வேண்டுமா, அல்லது முதல் இரண்டு பத்திகள் மட்டுமா என்ற விவகாரம் திங்களன்று கடும் சர்ச்சையாக மாறியது.
சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியபோது, சபை செயலர் பாடலை ஆரம்பித்தார்; உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாடினர். முதல் இரண்டு பத்திகள் முடிந்ததும், அரசு நிகழ்ச்சிகளில் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்ற மாநில அரசின் நிலைப்பாட்டை முன்வைத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பாடுவதை நிறுத்தினர்.
ஆனால் பா.ஜ.க. மற்றும் ம.ஜ.த. உறுப்பினர்கள் தொடர்ந்து முழுப் பாடலையும் பாடி முடித்து, “பாரத் மாதா கீ ஜே” என கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
இதேபோல் சட்ட மேல்சபையிலும் முதலில் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்பட்ட நிலையில், பா.ஜ.க. உறுப்பினர்கள் முழுப் பாடலைப் பாடி ஆளுங்கட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்; தலைவர் இருக்கை முன்பாகவும் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
குழப்பம் நீடித்ததைத் தொடர்ந்து, மேல்சபை தலைவர் சலீம் அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.





