கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழை நேற்று மேலும் தீவிரமடைந்து, பல இடங்களில் நிலச்சரிவும் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மலப்புரம் மாவட்டம் டி.கே. காலனி பகுதியில் உள்ள சூழல் சுற்றுலா மையத்துக்கு அருகேயான கொட்டப்புழா ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். மழை வலுத்ததைத் தொடர்ந்து கரைக்கு வருமாறு அப்பகுதி மக்கள் எச்சரித்த நிலையில், பலர் திரும்பிக் கொண்டிருந்தபோது நீர்மட்டம் திடீரென உயர்ந்து சிலரை வெள்ளம் இழுத்துச் சென்றது.
மீட்புப் படையினர் சஜிதா (26), சஜாத் (30), ரஹீம் (32), ரபீக் (29) மற்றும் 60 வயது ஒருவர் என 5 பேரின் உடல்களை மீட்டனர்.
மூணாறு வட்ட வாடா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாலகிருஷ்ண பெருமாள் (51), சின்னம்மாள் (38) உயிரிழந்தனர். கோட்டையம் மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் அப்ப்ச்சன் (80) உயிரிழந்தார். அதே மாவட்டத்தில் பாறை சரிந்து விழுந்ததில் சென்னை சேர்ந்த சுற்றுலாப் பயணி சங்கீதா (35) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மழை ஓயும் வரை மாநிலம் முழுவதும் சுற்றுலா மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.





