சென்னை: ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் நடவடிக்கை தாமதமானதாக கூறி, திமுக அரசு யாரை காப்பாற்ற முயன்றது என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் ஒரு ஆண்டாக வழக்குப்பதிவு செய்யாமல் கோப்பை உள்ளே வைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்து வரும் நிலையில், இப்படியான தாமதம் ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய வழக்குகள் சார்புத் தன்மை இன்றி நடுநிலையுடன் அணுகப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவதே இலக்கு என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் அரசியல் புள்ளிகளாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கு முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது; தினசரி தகவல் கேட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கை மூடி மறைக்க முயற்சிகள் நடந்ததாகவும், யாருக்காக இந்த வழக்கு தள்ளிப்போனது என்பது இன்னும் மர்மமாக இருப்பதாகவும் கூறிய அவர், கடந்த ஆட்சியில் முறையாக விசாரித்திருந்தால் இது ஒரு விழிப்புணர்வாக மாறியிருக்கும் எனவும் தெரிவித்தார்.