தஞ்சாவூர் மாவட்டத்தில் சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமித்ததாக கூறப்படும் 31.37 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக, பல்கலைக்குச் சொந்தமான வேறு நிலத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 31.37 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை பல்கலை ஆக்கிரமித்து, பெரிய கட்டடங்களை எழுப்பி வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி 9-ம் தேதி வருவாய்த் துறை உடனடியாக நிலத்தை மீட்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியிருந்தது. பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான, நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பல்கலை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போதுள்ள இடத்திற்கு பதிலாக சுமார் 5 கி.மீ. தொலைவில் பல்கலைக்குச் சொந்தமான நிலத்தை அரசுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும், அல்லது சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகை செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, அரசு நில ஆக்கிரமிப்பை எந்த காரணத்திற்கும் அனுமதிக்க முடியாது என வாதிட்டனர்.
இதற்கு நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் பெரிய கல்வி நிறுவனம் செயல்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்டனர். மாற்று நிலம் பெறுவது குறித்து தமிழக அரசு உயர்மட்ட ஆலோசனை நடத்தி தங்களின் நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.





