ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் தம்பி ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம், செப்.21 அன்று 76 வயதில் காலமானார்.
அவரது மறைவையடுத்து துபாயில் 10 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக துபாய் முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்த ஷேக் முகமது, தம்பி பிரிந்தாலும் அவர் தங்களின் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் நிலைத்திருப்பார் என குறிப்பிட்டார். துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் உள்ளிட்ட பல தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1950-ல் பிறந்த ஷேக் அகமது, மறைந்த முன்னாள் துபாய் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் இளைய மகன். இங்கிலாந்தின் சாண்ட்ஹர்ஸ்ட் ராயல் ராணுவக் கல்லூரியில் கல்வி பயின்றவர்.
துபாய் போலீஸ் மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவராக பணியாற்றிய அவர், துபாய் பாதுகாப்புத் துறையில் பல உயர்பொறுப்புகளையும் வகித்துள்ளார்; துபாய் ராணுவ தலைமைத் தளபதியாகவும் இருந்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவரது மறைவு யுஏஇயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





