காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சி தலைவர் சோனியா காந்தி தொடர்பான ஒரு புகாரில், எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குடியுரிமை பெறுவதற்கு முன்பே, 1980-ல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான விகாஸ் திரிபாதி, டெல்லி கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சோனியா காந்தி 1983 ஏப்ரலில் தான் இந்திய குடியுரிமை பெற்றார் என்றும், ஆனால் அதற்கு முன்பே 1980-ல் சப்தர்ஜங் ரோடு முகவரியை அடிப்படையாகக் கொண்டு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், 1982-ல் நீக்கப்பட்டு 1983-ல் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது போலி ஆவணங்கள் மூலம் நடந்திருக்கலாம் எனக் கூறி, எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அவர் கோரினார்.

இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2025 செப். 11-ல் “போதிய ஆதாரங்கள் இல்லை” எனக் கூறி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திரிபாதி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி விஷால் கோக்னே பிறப்பித்த உத்தரவில், காரணங்களை தெளிவாக குறிப்பிடாமல் மனுவை தள்ளுபடி செய்ததை ஏற்க முடியாது என்றும், சட்ட மற்றும் நடைமுறை பிழைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடலாமா அல்லது முதற்கட்ட குற்றவியல் விசாரணை நடத்தலாமா என்பதையும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமிருந்து நிலை அறிக்கை பெற்று பரிசீலிக்க வேண்டிய நடைமுறையையும் மாஜிஸ்திரேட் பின்பற்றவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.

வாக்காளர் பட்டியலில் நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே இடமுண்டு என்பதால், குற்றச்செயல் நடந்துள்ளதா என்பதை ஆராயாமல் புகாரை தள்ளுபடி செய்தது சரியல்ல என்றும், ஜனநாயகத்தில் வாக்காளர் பட்டியலின் புனிதத்தன்மை குடிமக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் கூறியது. எனவே, வழக்கை மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கே அனுப்பி, காவல் துறையின் நிலை அறிக்கை பெற்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, விரிவான காரணங்களுடன் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை செப். 29-க்கு ஒத்திவைத்தது.