விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது குண்டு வெடிக்கும் என மிரட்டியதாக கூறப்படும் இருவரை போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்ரமணியம் குற்றம்சாட்டினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் “பாரத மாதாவிற்கு ஜே” என முழக்கமிட்டபோது, மசூதியில் இருந்த இருவர் நகரில் குண்டு வெடிக்கும் என காவல்துறையினரிடமே தைரியமாக கூறியதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது எனவும் அவர் விமர்சித்தார்.

அந்த இருவரை 10 நாட்களுக்குள் கைது செய்யாவிட்டால் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்தார். மேலும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு எதிராக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டதாகவும், சில ஊர்களில் ஊர்வலம் சிறப்பாக நடந்ததாகவும் கூறினார்.

இந்த ஆண்டு பெண்கள் அதிக அளவில் பங்கேற்றதாக கூறிய அவர், ஹிந்துக்கள் எழுச்சி பெறுவது பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளுக்கு பொறுக்கவில்லை என தெரிவித்தார். வழக்கு பதிவு செய்ததாக போலீஸ் கூறினாலும், கைது தாமதம் ஏற்பட்டால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறி, உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.