ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கும் முதன்மை நிறுவனத்துக்கும் நேரடி முதலாளி–தொழிலாளி உறவு இல்லாத நிலையில், அந்த நிறுவனத்தால் கிராஜுவிட்டி (பணிக்கொடை) வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தொடர்பாக விசாரிக்கப்பட்டது.

ஓ.என்.ஜி.சி. மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு கிராஜுவிட்டி வழங்க வேண்டும் என கோரினர். பணிக்கொடை வழங்குதல் சட்டத்தின் கீழ் செயல்படும் கட்டுப்பாட்டு ஆணையம் ஓ.என்.ஜி.சி. வழங்க உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீட்டு ஆணையம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து தொழிலாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து, ஓ.என்.ஜி.சி. கிராஜுவிட்டி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓ.என்.ஜி.சி. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நீதிபதிகள் அஹ்சனுதீன் அமனுல்லா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டுப்பாட்டு ஆணையத்தின் பணி கிராஜுவிட்டி தொகையை கணக்கிடுவதுதான்; அதை யார் வழங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அல்ல என குறிப்பிட்டது. ஒப்பந்த விதிமுறைகளில் ஓ.என்.ஜி.சி. மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கிடையில் நேரடி முதலாளி–தொழிலாளி உறவு இல்லை என்பது தெளிவாக இருப்பதால், ஓ.என்.ஜி.சி. மீது பொறுப்பு சுமத்த முடியாது என தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் ஓ.என்.ஜி.சி. ஏற்கனவே கிராஜுவிட்டி தொகையை வழங்கியிருப்பதும், அது தொழிலாளர்களிடம் சென்றுவிட்டதால் திரும்பப் பெற முடியாது என்பதும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எதிர்காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கிராஜுவிட்டியை நேரடியாக பணியமர்த்திய ஒப்பந்ததாரர்களிடமே கோர வேண்டும்; முதன்மை நிறுவனத்திடம் கோர முடியாது என்பதே இந்த தீர்ப்பின் விளக்கம் என தெரிவிக்கப்பட்டது.