சென்னை: தமிழகத்தில் இதுவரை 17,277 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 228 பேருக்கு புதியதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில், சென்னையில் மட்டும் 79 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், உண்ணி காய்ச்சல் பாதிப்பும் 29 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை, நோய் அதிகரிக்கும் பகுதிகள், கொசு உற்பத்தி இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் புகை மருந்து அடிக்கும் உபகரணங்களின் இருப்பு உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.