அமெரிக்க இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், டெக்சாஸ் மாநிலத்தில் 90 அடி உயர அனுமன் சிலையை அகற்ற வேண்டும் என யூடியூபர் ஜெஸ்ஸி ஹியூஸ் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஹிந்து அமைப்புகளும் இந்திய-அமெரிக்க சமூகத்தினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
ஹூஸ்டன் அருகேயுள்ள சுகர்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயிலில் இந்த பிரம்மாண்ட அனுமன் சிலை உள்ளது. “ஒற்றுமையின் சிலை” என அழைக்கப்படும் இது 2024 ஆகஸ்டில் திறக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலை எனவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளத்தில் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்த ஹியூஸ், “நாங்கள் வெற்றி பெற்றவுடன் இதை இடிப்போம்” என பதிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இனவெறி மற்றும் மத சகிப்பின்மையின் வெளிப்பாடு என விமர்சகர்கள் கூறினர்; சில அமெரிக்க அரசியல்வாதிகளும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் டெக்சாஸில் குடியேற்றம் மற்றும் கலாசாரம் தொடர்பான அரசியல் விவாதங்களின் மையமாக மாறியுள்ளது. சிலை திறக்கப்பட்ட நாளிலிருந்தே சில கிறிஸ்தவ பழமைவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் வீரரான ருசிர் பக்ஷி, ஹியூஸின் கருத்துகளை தேசபக்தியற்றவை என்றும் ஹிந்து மதத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் கண்டித்துள்ளார். இதற்கிடையில், அரசியல் வட்டாரங்கள் டெக்சாஸ் கவர்னராக உள்ள குடியரசுக் கட்சியின் கிரெக் அபோட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துக் கொள்வார் என தெரிவித்துள்ளன.





