தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் அருள் பிரியா தலைமையில் 6 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது. அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள், ஊழியர்களை உள்ளேயே வைத்துக் கொண்டு விசாரணை மற்றும் ஆவணச் சரிபார்ப்பில் போலீசார் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்தது. நகரமைப்பு பிரிவு அலுவலகம் அருகே கீழே வீசப்பட்ட நிலையில் கிடைத்த ரூ.50,000-ஐ போலீசார் பறிமுதல் செய்து, அது யாருடையது என்பதை கண்டறிய அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரித்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் சாலை பணிகளுக்கான ரூ.4 கோடி தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நகராட்சி இன்ஜினியர் பட்டுராஜன் கைது செய்யப்பட்டார். முதல் தவணையாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர்.
இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் மற்றும் ஊட்டி நகராட்சி அலுவலகத்திலும் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.





