தமிழகத்தில் வீடுகளில் மேற்கூரை சூரிய மின் நிலையங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மார்ச் 2027க்குள் ஒரு லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய மின் நிலையங்களை அமைப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணச் செலவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தும் ‘பிரதமரின் சூரிய சக்தி வீடு’ திட்டத்தின் கீழ், 1 கிலோவாட் திறனுக்கு ரூ.30,000, 2 கிலோவாட்டிற்கு ரூ.60,000, அதற்கு மேல் அமைத்தால் ரூ.78,000 மானியம் வழங்கப்படுகிறது.
இதனுடன் தமிழக அரசின் சிறப்பு கூடுதல் மானியமாக 1 கிலோவாட்டிற்கு ரூ.5,000, 2 கிலோவாட்டிற்கு ரூ.10,000, 3 கிலோவாட்டிற்கு ரூ.22,000 வழங்கப்படும். இதனால் மொத்த மானியம் 1 கிலோவாட்டிற்கு ரூ.35,000, 2 கிலோவாட்டிற்கு ரூ.70,000, அதற்கு மேல் அமைத்தால் ரூ.1 லட்சம் வரை கிடைக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விண்ணப்பித்தவர்களுக்கு மானியம் பொருந்தும்; 1 கிலோவாட் அமைப்பில் தினமும் 5 யூனிட் வரை உற்பத்தி செய்ய முடியும் என்றும், உற்பத்தி மின்சாரம் பொது மின் வினியோக பாதைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை அமைச்சர் நிர்மல் குமார் சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். எரிசக்தித் துறை செயலர் அனில் மேஷ்ராம், மின் வாரிய தலைவர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பசுமை ஆற்றல் கட்டமைப்பில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும், இந்தாண்டில் திட்டத்திற்காக முதல்வர் விஜய் ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மக்கள் எளிதாக விண்ணப்பித்து பயன் பெற https://tnebltd.gov.in/usrp/ என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் திட்ட விவரங்கள், மத்திய–மாநில மானியத் தகவல்கள், நிறுவல் வழிமுறை, விண்ணப்ப நடைமுறை, விண்ணப்ப நிலை, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். மத்திய மானியம் வரவு வைக்கப்பட்டதும் மாநில இணையதளம் தானாகவே கூடுதல் மானியத்தை விடுவிக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக கூடுதல் மானியத்திற்கு இரண்டாவது விண்ணப்பம் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1.13 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு 97,732 சூரிய மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன; இதன் மூலம் 337.49 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது. மாநிலத்தின் மொத்த மேற்கூரை சூரிய மின் நிறுவு திறன் 1,859.27 மெகாவாட் எனவும் கூறப்பட்டது.




