வாஷிங்டன்: சிஎன்என், எம்எஸ்நவ், பொலிடிகோ ஆகிய ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகை தடை விதிக்கப்பட்ட பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார்.
தனது பதிவில், அடையாளம் தெரியாத ஆதாரங்களை முன்வைத்து பொய்யான மற்றும் அவதூறான கதைகளை எழுதுவோர், மேலும் அது தேசியப் பாதுகாப்பை மீறும் வகையில் இருப்பதாக அவர் கூறினார். “உலகின் மிக முக்கியமான அலுவலகத்திற்குள்” அத்தகைய நபர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஓவல் அலுவலகம் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னைப் பற்றிய அல்லது தன்னுடன் தொடர்புடைய செய்திகளில் பெரும்பாலானவை எதிர்மறையாகவும் தவறாகவும் இருப்பதாக டிரம்ப் கூறினார். தனது சாதனைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவற்றை சிறுமைப்படுத்தி காட்டுவதாகவும், ஊடகங்கள் நேர்மையற்றதும் ஊழல் நிறைந்ததும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற சூழலிலும் தாம் “பிரம்மாண்டமான வெற்றி” பெற்றதற்குக் காரணம் ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை இல்லாததே என அவர் கூறினார்.
இது நாட்டிற்கு “மிக மோசமான விஷயம்” என குறிப்பிட்ட டிரம்ப், அத்தகைய நபர்களுக்கு ஏன் சந்திக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். நாட்டின் வெற்றி மற்றும் பாதுகாப்பிற்காகப் போராடுவது தன் கடமை என்றும், போலிச் செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் கூறி, அமெரிக்கா செழித்து வளர தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார்.





