மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அளித்த பட்டியலின் அடிப்படையில் நட்சத்திர பேச்சாளர்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அதன்படி, தவெக சமர்ப்பித்த பட்டியலில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன், ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களாக காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பிற கட்சி தலைவர்களை தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சேர்த்ததற்கு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தன. இதை சட்டவிரோதம் எனக் கூறி, அவர்களின் பிரசாரச் செலவுகளை தவெக வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.




