தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவது உள்ளிட்ட பணிகளை செய்து தருவதாக கூறி ரூ.100 கோடி அளவில் மோசடி நடந்ததாக உள்ள புகாரில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷின் உறவினர் கார்த்திக் (45) என்பவரிடம் சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகள் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், திமுக செய்தி தொடர்புக் குழு துணைத் தலைவர் அரசகுமார் (58) தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் உள்ளிட்ட பணிகளை செய்து தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் பணம் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தி, அரசகுமார் உள்ளிட்ட மூவரை கைது செய்தது.
போலீசார் கூறுகையில், அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகேஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவித்தனர். மேலும், மகேஷிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறினர்.
இதன் தொடர்ச்சியாக கார்த்திக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டதுடன், கார்த்திக் மற்றும் அரசகுமார் இடையே பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் விவரங்களும் கேட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்; கேள்விகளுக்கு கார்த்திக் முன்னுக்கு பின் முரணான பதில்கள் அளித்ததாகவும் அவர்கள் கூறினர்.





