நடிகை அம்பிகா, சகோதரி ராதா சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாருக்கு பதிலளித்து, அது “உண்மைக்கு புறம்பானது” என்றும், ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான சொத்து பிரச்னையிலிருந்து உருவான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்தார்.

ராதா தனது சென்னை வீட்டில் இருந்த செக் திருடப்பட்டதாகவும், அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் இணைந்து ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாகவும் புகாரில் கூறியிருந்தார். மேலும், இதுகுறித்து பேச தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை என்றும், வீட்டிற்குள் கூட அனுமதிக்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செப்.23 அன்று சென்னை செய்தியாளர்களை சந்தித்த அம்பிகா, பிரச்னையின் மையம் ஏஆர்எஸ் கார்டன் சொத்தே என கூறினார். ஏஆர்எஸ் கார்டன் உருவாக தானே முக்கிய காரணம் என்றும், அது எம்ஜிஆர் கொடுத்தது என்ற தகவல் தவறு என்றும், தன் உழைப்பில் உருவானது என்றும் கூறினார்.

மேலும், ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் இருந்து தன் பெயரை அறிவிக்காமல் நீக்கியதாகவும், தன் பெயரில் உள்ள தங்கத்தை ராதா வைத்திருப்பதாகவும் அம்பிகா குற்றம்சாட்டினார். சொத்து பிரச்னையை தீர்க்க ராதா தான் செக் கொடுத்து பின்னர் அதை நிறுத்தியதாக கூறிய அவர், “நான் உண்மையை சொன்னால் அவர் தான் சிறைக்கு செல்ல நேரிடும்” என தெரிவித்தார்.