தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், செப்.23 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாநிலத்தின் தற்போதைய மின் உற்பத்தி நிலை மற்றும் மின் தேவையின் அளவு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். பின்னர் ஆய்வை முடித்து முதல்வர் அங்கிருந்து புறப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு நடந்ததாகவும், சுமார் 6,000 டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். தேர்தல் காரணமாக பராமரிப்பு பணிகள் தள்ளிப்போனதால் தற்போது பழுதுகள் வெளிப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சீரமைப்பு பணிகள் நடைபெறுவதற்கு மக்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்ட அமைச்சர், சீரமைப்பு செய்யப்படாத பகுதிகளில் லோடு தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைவதாக கூறினார். மேலும் 20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலையங்களை மேம்படுத்தும் திட்ட முன்மொழிவு முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





