சென்னை போலீசார், ‘ஜெம்’ கிரானைட்ஸ் தொழில் வர்த்தகர் வீரமணி (85) மீது உள்ள சிறுமியர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வீடியோக்கள் ஒரு செல்போனில் இருந்ததாக கூறி, அவரிடம் 23 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய கணேசனை கைது செய்துள்ளனர்.

வீரமணி ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், தேனாம்பேட்டையில் வாடகை வீட்டில் சிறுமியரை தங்கவைத்து தொடர்பை ஏற்படுத்த உதவியதாக கூறி சாந்தி (60) மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63) ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட புகார் ‘ஆதாரங்கள் இல்லை’ என கூறி விசாரணை முடிக்கப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

வழக்கிலிருந்து தப்பிக்க முயன்று இடைத்தரகர்கள் மூலம் பண பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், ஈ.சி.ஆரில் உள்ள சொத்தை விற்று பெரிய தொகைகளை வழங்கியதாகவும் உள்ள புகார்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பண விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் பிரகாஷ் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் வெளிநாடு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் கூறுகையில், தற்போது ‘பாலாஜி குளோபல் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் கணேசனின் மொபைல் போனில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததாகவும், அவை எப்படி கிடைத்தன, யார் அனுப்பினர் என்பதைக் கூற மறுத்ததாகவும் தெரிவித்தனர். வீடியோக்கள் இருந்தும் காவல் துறைக்கு தகவல் அளிக்காத குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, வீடியோக்களின் பின்னணி குறித்து விசாரணை தொடர்கிறது.