மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் அக்.6 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து பின்னர் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே வழக்கமாக பணம், பரிசு விநியோகம் போன்றவை பேசுபொருளாகும் நிலையில், இம்முறை இரு தொகுதிகளிலும் அதற்கான வெளிப்படையான அறிகுறி இதுவரை தெரியவில்லை என களத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து தேர்தல் கமிஷன் 18 பறக்கும் படைகளை களமிறக்கி கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வங்கிகளில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் அதன் விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பதை ட்ரோன் உதவியுடன் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்கள் மரகதம், சத்யபாமா ஆகியோர் சிறப்பு கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா இல்லாத சூழலில் வாக்குப்பதிவு அதிகரிக்குமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி பங்கேற்றதாகவும், இடைத்தேர்தலில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது. செலவழிக்க சீனியர்கள் தயங்குவதால் இந்த முடிவு என கட்சியினர் கூறினாலும், களத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் ‘ஆளுங்கட்சியாக இருந்தபோது கொடுத்த “பார்ட்டி பண்ட்” எங்கே? அதை எடுத்து இடைத்தேர்தலுக்கு செலவு செய்யுங்கள்’ என தலைமை நிர்வாகிகளிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.