திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ‘மினி டைடல் பார்க்’ திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பணிகள் தொடங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், பெரிய நகரங்களில் பெரிய அளவில் டைடல் பார்க் கட்டடங்களையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 முதல் 1 லட்சம் சதுர அடி அளவில் ‘மினி டைடல் பார்க்’ கட்டடங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைடல் பார்க் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பல மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதேபோல், கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் ஓசூரில் ரூ.400 கோடியில் 5 லட்சம் சதுர அடி அளவில் டைடல் பார்க் கட்ட கடந்த ஆட்சியில் டெண்டர் கோரப்பட்ட நிலையில், தேர்வான நிறுவனத்துக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய டைடல் பார்க் மற்றும் மினி டைடல் பார்க் கட்டடங்களை கட்ட ‘டைடல் பார்க்’ நிறுவனத்திடம் தற்போது நிதி இல்லை என்றார். மேலும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அடிக்கல் நாட்டப்பட்ட மினி டைடல் பார்க் பணிகளை தொடங்க வேண்டாம் என ஒப்பந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இதே காரணத்தால் ஓசூர் திட்டத்திற்கும் பணி ஆணை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டங்கள் தொடர்பாக வரும் நாட்களில் அரசு எத்தகைய ஆலோசனை வழங்குகிறதோ, அதற்கேற்ப அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரி தெரிவித்தார்.