புதுடில்லி: உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும், இந்தியாவின் சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பாராட்டினார்.
தனது பதிவில், முன்னணியில் நின்று பணியாற்றும் வனத்துறையினர் உள்ளிட்ட அனைவரின் அர்ப்பணிப்பும் காண்டாமிருக பாதுகாப்பில் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். உலகின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் மக்கள் தொகையில் சுமார் 80% அசாமில் வாழ்கின்றன என்றும் தெரிவித்தார்.
காசிரங்கா தேசியப் பூங்காவில் வேட்டையாடுதலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகள் உலகளவில் பாராட்டத்தக்கவை என கூறிய அவர், அசாம் மட்டுமின்றி பீஹார் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் காண்டாமிருகங்கள் மீண்டும் பெருகி வருவதாகச் சொன்னார். உத்தரபிரதேசத்தின் துத்வா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், காண்டாமிருகங்களின் வாழ்விட மேலாண்மை, மரபணு மேம்பாடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி-தொழில்நுட்ப உதவிகளை வழங்க ‘பிராஜெக்ட் ரைனோ’ தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.





