பட்டியலின மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு ஊழியர் மீது ‘கடமை தவறியது’ என்ற குற்றச்சாட்டில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முன், தகுதியான அதிகாரி மூலம் நிர்வாக ரீதியிலான விசாரணை நடத்தப்படுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு, திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியில் நிலத் தகராறு தொடர்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக கூறப்பட்ட எஸ்.பி. மற்றும் எஸ்.ஐ. ஆகியோரின் மேல்முறையீட்டில் வெளியானது. புகாருக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கு பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நபர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இரு அதிகாரிகள் மீதும் எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின் கீழ் கடமை தவறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்த நிலையில், அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, வினோத் கே. சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கில் முன்கூட்டியே எந்த நிர்வாக விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும், சிறப்பு நீதிமன்றம் நேரடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது சட்ட நடைமுறைக்கு முரணானது என்றும் குறிப்பிட்டது. இதனால், புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் மற்றும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தது.
மேலும், 2018 திருத்தங்களின் செல்லுபடித்தன்மை தொடர்பான மனுவை பரிசீலித்த போது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க போதுமான நீதித்துறை பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. சட்டமன்ற அதிகார வரம்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது.





