டில்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, தெளிவான காரணங்கள் இல்லாமல் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாக எழுந்த புகார்களுக்கு தேர்தல் கமிஷன் (EC) விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் விடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே வாக்காளர்கள் அளித்த தகவல்களில் “தர்க்கரீதியான முரண்பாடுகள்” உள்ளதாகக் கூறி பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த திருத்தப் பணியில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி, சுமார் 33 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்–பிள்ளைகளின் வயது வித்தியாசம் குறைவாக இருப்பதாகக் கூறியும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து, பல நோட்டீஸ்கள் கணினி மூலம் இயந்திரத்தனமாக தயாரிக்கப்பட்டு, தெளிவான காரணமின்றி அனுப்பப்பட்டவை போலத் தெரிகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. நோட்டீஸ் அனுப்புவதற்கு முன் கூடுதல் பரிசீலனை அவசியம் என்றும், வாக்காளர்களிடம் கேட்கப்படும் தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், வேறு மாநிலங்களில் இருந்து டில்லிக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களிடம் ‘2019ல் எங்கு ஓட்டளித்தீர்கள்?’ போன்ற குறிப்பிட்ட கேள்விகளை கேட்கலாம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிடவும், வாக்காளர் பதிவு அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து உதவவும் தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது.





