புதுடில்லி: குறுகிய காலத்திற்கு செல்லுபடியாகும், இணையதள சேவை இல்லாத குரல் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயமாக வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் இல்லாத சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் இணையதள சேவை தேவையில்லாத வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் டேட்டாவுடன் கூடிய திட்டங்களே அதிகமாக வழங்கப்பட்டதால், அடிப்படை போன் பயனர்கள் தேவையற்ற அளவில் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13வது திருத்தம்) ஒழுங்குமுறை, 2026ன் விதிகளின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான செல்லுபடியாகும் குரல், எஸ்.எம்.எஸ்., டேட்டா கொண்ட திட்டங்களுக்கு இணையாக, குரல்–எஸ்.எம்.எஸ். மட்டும் கொண்ட திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த தேதி குறிப்பிட்ட மாதத்தில் இல்லையெனில் அந்த மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்தல் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
டேட்டா வசதி நீக்கப்படுவதால், இந்த புதிய குரல் அழைப்பு–எஸ்.எம்.எஸ். திட்டங்கள், இணையதள வசதியுடன் வரும் வழக்கமான திட்டங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த கட்டணத்தில், மலிவாக இருக்க வேண்டும் என டிராய் கூறியுள்ளது. இந்த கட்டண அமைப்பு நுகர்வோரின் தேவைகளைச் சிறப்பாக பூர்த்தி செய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





