அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களை பாதித்த திடீர் தொழில்நுட்பக் கோளாறால், நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகவும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியாவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட திடீர் மின்சுற்று பழுதால் ரேடார் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவசரகால காப்பு கம்பிவடம் (பேக்கப் ஃபைபர் லைன்) வழியாக சேவைகளை இயக்க முயன்றபோது, அந்த இணைப்பும் செயலிழந்திருந்தது தெரியவந்தது.

அருகில் நடைபெறும் ரயில் பாதை பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது தற்செயலாக கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதன் தாக்கம் நியூயார்க், பிலடெல்பியா, பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் அதிகமாக இருந்தது.

உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்திற்காக நியூயார்க்கிற்கு பயணம் செய்து கொண்டிருந்த முக்கிய நேரத்தில் இந்த முடக்கம் ஏற்பட்டதால், விமானப் பயணங்களில் ஏற்பட்ட குழப்பம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.