புதுடில்லி: சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டு தனிநபர் பராமரிப்பு பொருட்களின் பேக்கேஜிங்கில் சைவம்/அசைவம் அடையாளக் குறியீடு இடம்பெற வேண்டும் என மத்திய அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதுவரை உணவுப் பொருட்களின் பாக்கெட்களில் சைவம் என்றால் பச்சை நிறக் குறியீடும், அசைவம் என்றால் சிவப்பு நிறக் குறியீடும் அச்சிடப்படும் நடைமுறை இருந்தது. அதே போன்ற நிறக் குறியீட்டை சில உணவல்லாத பொட்டலப் பொருட்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சட்ட அளவியல் (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011ல் திருத்தம் செய்யப்பட்டு, உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிப்படி, முழு சைவப் பொருட்களுக்கு பச்சை நிறப் புள்ளி குறியீடாக இருக்க வேண்டும். விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அசைவம் என்பதை காட்ட சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி குறியீடு அச்சிட வேண்டும்.
இந்த குறியீடு நுகர்வோரின் கண்களுக்கு தெளிவாகத் தெரியும்படி, பேக்கேஜின் மேல்புறத்தில் முக்கியமாக அச்சிட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு ஏற்ற பொருட்களை நுகர்வோர் எளிதில் தேர்வு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.





