சென்னை: இடைத்தேர்தல் கள நிலவரம் ஆளும் கட்சிக்கு சாதகமாக இல்லை என கூறப்படும் சூழலில், தன் பிரசாரம் தொடங்கினால் நிலைமை சரியாகிவிடும் என்று த.வெ.க. நிர்வாகிகளிடம் முதல்வர் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் வென்ற மரகதம், சத்யபாமா ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். தற்போது அவர்கள் ராஜினாமா செய்த அதே தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களாக இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
த.வெ.க. மூத்த நிர்வாகிகள் கூறுவதன்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அ.தி.மு.க.வில் இருந்து வந்த இருவருக்கு வாய்ப்பு அளித்த முடிவு வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்குள்ளும் அதிருப்தி உருவாகியுள்ளதாக அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் த.வெ.க. பொதுச்செயலரும் அமைச்சருமான ஆனந்திடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறை அறிக்கையும் எதிர்மறையாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக தகவல்.
அக்கூட்டத்தில், “நான் பிரசாரம் செய்யும் வரை தான் அதிருப்தி; இரு தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று விஜய் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவரது வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, வாக்குகள் வேட்பாளர்களுக்கல்ல, விஜயின் முகத்திற்கே என்ற வகையில் பேசியதாகவும், இதனால் கள நிலவரத்தை மேலிடம் தீவிரமாக எடுத்துக்கொள்கிறதா என்ற சந்தேகம் சில நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




