புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), காங்கிரஸ் தலைவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாணவர் பிரச்னைகளை பேசுவதற்குப் பதிலாக மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ‘மாணவர் குரல்’ என்ற பெயரில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்கும் ராகுல், வினாத்தாள் கசிவு, கல்விக் கட்டண உயர்வு, அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் குறித்து ஏபிவிபி தேசிய பொதுச்செயலர் வீரேந்திர சிங் சோலங்கி கூறுகையில், மாணவர் பிரச்னைகளை மாணவர்களே முன்வைக்க வேண்டும் என்றும், ராகுல் மாணவர் அல்ல; பார்லிமென்டில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் என்றும் தெரிவித்தார். மேலும், இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் காங்கிரஸ் மாணவர் அரசியலில் நுழைய முயல்கிறது எனவும் அவர் கூறினார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல் நோக்கங்களுக்காக திரட்டுவதற்காக நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை மற்றும் மிமிக்ரி கலைஞர்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சமீபத்தில் நடந்த ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சிக்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கு மாறாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு, பல்கலை மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய தேர்வு முகமை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளிடமும் அரசிடமும் மாணவர் பிரச்னைகளை ஏபிவிபி முன்வைத்து வருவதாக சோலங்கி தெரிவித்தார்.





