கேரளத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த “ஆப்பரேஷன் துாபான்” என்ற பெயரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும், ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு கண்ணுார் அருகே நியூமாகி பகுதியில் தொடங்கியது. அங்கு ரெஜினாஸ் கான் என்பவர் 0.6 கிராம் எம்.டி.எம்.ஏ. உடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஷமீல் என்பவரிடமிருந்து வாங்கியதாக தெரிய வந்ததையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்தி 185 கிராம் எம்.டி.எம்.ஏ. பறிமுதல் செய்யப்பட்டது.

ஷமீல் அளித்த தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள முஸ்தபா என்பவரிடமிருந்து போதைப் பொருள் வாங்கியதாக போலீசார் கூறினர். இதையடுத்து பெங்களூரு சென்ற போலீசார் முஸ்தபாவை கைது செய்தனர்; அவர் டில்லியில் இருந்து வாங்கியதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக டில்லி சென்ற தனிப்படை போலீசார், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சினலோ லிலியன் (36) மற்றும் கேமரூன் நாட்டைச் சேர்ந்த பிலோமினே சான் செலின் (30) ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து எம்.டி.எம்.ஏ. தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வரவழைத்து டில்லியில் தயாரித்து, கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்ததாக போலீசார் குற்றம்சாட்டினர்.

இவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட போலி ஆதார் கார்டுகள், 15 போலி பான் கார்டுகள், வங்கி காசோலைகள், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருவரும் கண்ணுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.