சென்னை: இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் முதலில் இணைந்து போட்டியிட திட்டமிட்டதாகவும், பின்னர் ஓட்டுகளைப் பிரிக்கும் நோக்கில் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்ததாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் தங்களது கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என்றார். திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முயன்றதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக சிலர் பதவி விலகி மக்கள் பலம் உள்ள கட்சியில் இணைந்ததாகவும் கூறினார்.

மேலும், திமுக–அதிமுக ஒரே வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் இருந்து பின்னர் மாற்றம் செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். தங்களது வேட்பாளர்களை மக்கள் எதிர்க்கவில்லை; திட்டமிட்டு திமுக, அதிமுக தரப்பினர் எதிர்ப்பு காட்டி கோஷங்கள் எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

ராஜினாமா விவகாரத்தில், திமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக முடிவு செய்தால் எம்எல்ஏக்கள் பதவி விலகுவதில் தவறில்லை என்றும், இபிஎஸின் “துரோகத்தை” பார்க்க முடியாததால் அவர்கள் ராஜினாமா செய்ததாகவும் கூறினார். மதுரை கோவில் கும்பாபிஷேக பணிகளில் அறங்காவலர் குழுவினர் சுதந்திரமாக செயல்பட்டதாகவும், பிடிஆர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் நிதியமைச்சர் பதவியில் இருந்து ஏன் திமுக அவரை நீக்கியது எனவும் கேள்வி எழுப்பினார்.