மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே சில எம்எல்ஏக்கள் அரசியல் காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து, பின்னர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது மக்கள் தீர்ப்பை புறக்கணிப்பதாகும் என வாதிடப்பட்டது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் செலவுகளை ஏற்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவை நிராகரித்தது. ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களுக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பதையும் நீதிமன்றம் மறுத்து, இத்தகைய மாற்றங்கள் பார்லிமென்ட் அல்லது சட்டசபை வழியாக சட்டமாக மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்தது.





