கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் உள்ள யானை வலசை பாதையில் சட்டவிரோதமாக இயங்குவதாக கூறப்படும் அனைத்து ரிசார்ட்டுகளின் ஆவணங்களையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில், யானைகள் செல்லும் பாதையில் சட்டப்படியான அனுமதியின்றி ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்திருந்தார். உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் ரிசார்ட்டுகளை மூட வேண்டும் என நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10 ரிசார்ட்டுகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எச்சரிக்கையை மீறி தொடர்ந்து இயங்குகிறதா என்பதை ஆர்.டி.ஓ. தலைமையிலான குழு கண்காணிக்க கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில் சில ரிசார்ட்டுகளில் இணைய வழி முன்பதிவு தொடர்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இணையத்தில் பதிவேற்றப்பட்ட முழு உத்தரவு நகலில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர், வழக்கில் இணைக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள ரிசார்ட்டுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினர். ஆவணங்கள் சரிபார்ப்பில் உரிய லைசென்ஸ் மற்றும் அனுமதி இருப்பின் செயல்பட அனுமதிக்கலாம்; இல்லையெனில் ரிசார்ட்டுகள் அல்லது நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் அதிகாரம் இல்லாத அல்லது தகுதி இல்லாத அதிகாரி வழங்கிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு எந்த வணிக நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. அப்பகுதியில் 33 ரிசார்ட்டுகள் இயங்குவதாக கூடுதல் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து அனைத்து ரிசார்ட்டுகளின் ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வழக்கு அக்டோபர் 8 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.




