ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி.) வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்வினை தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க ஓ.ஐ.சி.க்கு எந்த உரிமையும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.

நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறும் சூழலில், ஓ.ஐ.சி.யின் காஷ்மீர் தொடர்புக் குழு ஒரு கூட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அஜர்பைஜான், பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும், காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது போன்ற குறிப்புகளும் அதில் இருந்தன.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், எத்தனை பொய் பிரசாரம் செய்தாலும் அந்த உண்மை மாறாது என்றும் தெரிவித்தது. மேலும், உள்நோக்கத்துடன் கூடிய கருத்துகளை தொடர்ந்து ஆதரிப்பது ஓ.ஐ.சி.யின் நம்பகத்தன்மை குறித்து தீவிர கேள்விகளை எழுப்புகிறது எனவும் கூறியது.

அத்துடன், பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்குவித்ததற்கான நிரூபிக்கப்பட்ட வரலாறு பாகிஸ்தானுக்கு உள்ளது என்றும், பாகிஸ்தானுக்கு ஊதுகுழலாக செயல்படுவதற்குப் பதிலாக பயங்கரவாதத்தை விட்டொழிக்க அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.