ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு கவலை அளிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச்சபை கூட்டங்களில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசிய போது இந்தியாவின் அதிருப்தி மற்றும் கவலைகளை பதிவு செய்தார்.
ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டங்களால் இந்திய நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ரூபியோவுடனான சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், ரஷ்யா–ஈரான் தொடர்பான தடைச் சட்டம் குறித்து இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகளை எடுத்துரைத்ததாகவும் கூறினார். வளைகுடா நிலவரம் மற்றும் உக்ரைன் தொடர்பான விவகாரங்களும் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தகத் தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிப்பதற்கான சட்டத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 2022 முதல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





