ஜெனிவாவில் நடைபெற்ற 63வது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தஸ்லீமா அக்தர் பங்கேற்று, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை ‘இடுகாடு’ போல மாற்ற முயற்சி நடக்கிறது என குற்றம்சாட்டினார்.
அடிப்படை உரிமைகளை கோரி அமைதியாக போராடிய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறி, அதை அவர் கடுமையாக கண்டித்தார். உரிமைக்காக போராடும் மக்களை தோட்டாக்களால் ஒடுக்குகிற நாடு, காஷ்மீரிகளின் நலனில் உண்மையான அக்கறை காட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ‘ஆசாத் காஷ்மீர்’ என்று அழைப்பது மிகப்பெரிய பொய் என அவர் கூறினார். காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நிலைமையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அப்பாவி எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுவதாகவும், அங்கு வாழும் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யாரும் ஐ.நா.வில் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானுக்காக பேச லண்டனைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து போலியான பிம்பம் உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.





