புதுடில்லி: மக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை திரைப்பட பிரபலங்கள் விளம்பரப்படுத்தக் கூடாது என்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வேண்டுகோளுக்கு, மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே முழு ஆதரவைத் தெரிவித்தார்.
குஜராத்தில் நடைபெற்ற 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய ஜனாதிபதி, திரைப்படக் கலைஞர்கள் நாட்டின் இளைஞர்களிடையே பெரும் செல்வாக்கு செலுத்துவதாகக் குறிப்பிட்டார். மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு தரக்கூடிய பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும், பான் மசாலா போன்றவற்றை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “செல்வாக்கு என்பது சட்டத்திலிருந்து விலக்கு அல்ல” என முண்டே கூறினார். மற்றவர்களைப் போலவே நடிகர்களும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான பொருட்கள் கிடைப்பதற்கும் நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கும் பொறுப்பு இருப்பதை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உணவுப் பொருட்களை பிரபலப்படுத்தும்போது செல்வாக்கு பயன்படுத்தப்பட்டால், பொது சுகாதாரம் ஒருபோதும் இரண்டாம் பட்சமாக இருக்கக் கூடாது என முண்டே தெரிவித்தார். மஹாராஷ்டிராவில் உணவுப் பொருட்கள் விளம்பரங்களில் ஈடுபடும் திரைப்பட பிரபலங்களுக்கு ஏற்கனவே அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்றும், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியவற்றை ஊக்குவிக்க செல்வாக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.





