சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை (GO) ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டுவசதி, வருவாய் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானதாக கூறப்படும் 25.5 ஏக்கர் நிலத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில் சுமார் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு முன்பே முடிவு செய்திருந்தது. இதற்கான அரசாணை கடந்த 8ம் தேதி பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி மூலம் வெளியிடப்பட்டது.

ஆனால், இத்திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ள நிலையில், கடும் எதிர்ப்பு உருவானதால் திட்டத்தை கைவிட முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில், முன் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய பொதுத்துறை செயலருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தலைமைச் செயலகத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடம் குறித்த விவரங்களுடன் புதிய அரசாணை வெளியிடவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.