தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தை ஒழுங்குபடுத்தும் 2023 சட்டம் தொடர்பான அரசியலமைப்பு கேள்விகளை ஆராய, விசேஷ அமர்வு அவசியம் என்றும், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

2023ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், தேர்தல் கமிஷனர்கள் தேர்வு குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை சேர்க்கும் மாற்றம் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டி, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனிடையே, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

நீதிபதி தீபங்கர் தத்தா, இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார். தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல, அது சுதந்திரமாக இயங்குகிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் எடுக்கும் முடிவுக்கு அவரது அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர் எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பது நடைமுறையில் சாத்தியமா என கேள்வி எழுப்பிய அவர், தலைமை நீதிபதிக்கு பதிலாக அமைச்சரை சேர்த்தால் சமநிலை பாதிக்கப்படும் என்றார்.

மாறாக, நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நடுநிலை வகிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு குழுவில் இருந்து பார்லிமென்ட் நீக்க முடியுமா என்பது முதல்முறையாக எழும் மிக முக்கிய அரசியலமைப்பு கேள்வி எனக் கூறினார். எனவே அரசியலமைப்பு சட்டப்பிரிவு 145(3)ன் கீழ், குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே இதை விசாரிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவது தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தில் இருவரும் உடன்பட்டனர். 2023 சட்டத்தின் பிரிவு 7 உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின் செல்லுபடித்தன்மையை ஆய்வு செய்ய, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன், இத்தகைய அரசியலமைப்பு விவகாரங்களுக்கு நிரந்தர விசேஷ அமர்வை அமைப்பதையும் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.