சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ்குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்படக்கூடிய முடிவுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், மற்ற இரண்டு தேர்தல் கமிஷனர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைமை தேர்தல் கமிஷனர் தனிப்பட்ட முறையில் ரகசியமாக செயல்பட்டதாகவும், தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர்சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்கு கமிஷனில் நடப்பவை மறைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த 10 மாதங்களில் தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாக 14 முறை அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, இதனால் தேர்தல் கமிஷன் மீதான நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் கமிஷனில் முடிவுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்; அது சாத்தியமில்லையெனில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்பதே விதி என அவர் சுட்டிக்காட்டினார். மூவரில் இருவருக்கு அமைப்பில் நடப்பதே தெரியாத நிலை சாதாரணமல்ல என்றும், இதனால் ஞானேஷ்குமாரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.