சட்டக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (பி.சி.ஐ.) எந்த அளவுக்கு சட்ட அதிகாரம் கொண்டுள்ளது என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எழுப்பியது.
பி.சி.ஐ.யின் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோருடன் விசாரணைக்கு வந்தது. சட்டப் படிப்பை முடித்து தொழில்முறை உரிமம் பெற்ற பிறகே பி.சி.ஐ.யின் சட்டப்பூர்வ பணி தொடங்கும் நிலையில், சட்டக் கல்லூரிகளை அது எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்ய விரும்புவதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
சட்டக் கல்வியை நெறிமுறைப்படுத்த நிபுணர் அமைப்பாக பி.சி.ஐ. எப்படி இருக்க முடியும் என்றும், கல்வி சார்ந்த விவகாரங்களை கையாள சட்ட அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களே பொருத்தமானவர்கள் என்றும் அமர்வு கருத்து தெரிவித்தது. பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவது சாத்தியமெனினும், கல்லூரிகளை முடக்கி முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா என்ற கேள்வியையும் அது முன்வைத்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, 2016-ல் பி.சி.ஐ. தனது பழைய அறக்கட்டளையை கலைத்து நிதியை “பி.சி.ஐ., பேர்ல் பர்ஸ்ட்” என்ற புதிய அறக்கட்டளைக்கு மாற்றியதாக கூறினார். மேலும் பி.சி.ஐ. தலைவர் மனன் குமார் மிஸ்ரா தன்னை அந்த அறக்கட்டளையின் ஆயுட்கால அறங்காவலராக அறிவித்ததாகவும், அந்த அறக்கட்டளையின் மூலம் கோவா மற்றும் ஆந்திராவில் சட்டக் கல்லூரிகள் நிறுவப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒழுங்குமுறை அமைப்பாக இருக்கும் பி.சி.ஐ. சொந்தமாக சட்டக் கல்லூரிகளை இயக்குவது முரண்பாடு எனவும் அவர் வாதிட்டார்.
பி.சி.ஐ. சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, இனி ஆயுட்கால அறங்காவலர்கள் இருக்க மாட்டார்கள் என்றும், அவர்களின் பதவிக்காலம் சங்க உறுப்பினர் பதவிக்காலத்துடன் முடிவடையும் வகையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஒழுங்குமுறை அமைப்பிற்கு சட்டக் கல்லூரிகளை இயக்கவும் முழுமையாக கட்டுப்படுத்தவும் அதிகாரம் உள்ளதா என்ற பெரிய கேள்வியை ஆய்வு செய்ய முடிவு செய்த உச்சநீதிமன்றம், இரு வாரங்களில் பதிலளிக்குமாறு பி.சி.ஐ.-க்கு நோட்டீஸ் அனுப்பியது.





