வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாடும் தேசிய நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
வித்யா பாரதி அகில இந்திய சிக்ஷா சன்ஸ்தான் அமைப்பு ‘நமாமி பாரதம்’ என்ற பெயரில் இதை ஒருங்கிணைக்கிறது. நாடு முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து முழு வந்தே மாதரம் பாடலை ஒரே நேரத்தில் பாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; பங்கேற்போர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது.
‘ஒரே குரல் – ஒரே தீர்வு – ஒரே இந்தியா’ என்ற கருப்பொருளில் இந்த முயற்சி நடைபெறுகிறது. மக்களை ஒன்றிணைப்பதுடன், இளைய தலைமுறையினர் வந்தே மாதரத்தின் வரலாற்றுப் பயணத்தையும் சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்களிப்பையும் புரிந்துகொள்ளச் செய்வதே முக்கிய நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் மட்டும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு கோடி பேர் வந்தே மாதரம் பாடும் நிகழ்வை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





