சென்னை: ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருநகரங்களை மட்டும் மையமாகக் கொள்ளாமல் மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் விரிவடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஏஐ தொழில்நுட்பத்தைத் தாண்டி இந்தியாவுக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களில் தற்சார்பு நிலையை அடைய அதிக அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு அவசியம். தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை இழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் இயல்பானதே என்றாலும், இளைஞர்கள் தங்கள் திறன்களையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்தி காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், அதிகரிக்கும் புவிசார் அரசியல் மோதல்களுக்கிடையிலும் இந்திய பொருளாதாரம் மீள்தன்மையுடன் தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். முழுமையாக ஏற்றுமதியை மட்டும் சாராமல், நாட்டின் உள்நாட்டுச் சந்தையைப் பயன்படுத்தி வளர்ச்சி மாதிரியை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கிராமப்புற வளர்ச்சி மாவட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு விரிவடையும்போது அங்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்; இதனால் சென்னை, பெங்களூரு, புனே போன்ற பெருநகரங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்வதும் குறையும் என்று அவர் தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆராய்ச்சி-மேம்பாடு சார்ந்த பணிகளும், அதிநவீன சிறுதொழில்களும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.