உத்தரப் பிரதேசத்தில் யமுனா விரைவுச்சாலையில் நடந்த தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நொய்டா சர்வதேச விமான நிலையம் அருகே சென்ற தனியார் ஸ்லீப்பர் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பயணிகள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டில்லியிலிருந்து மஹோபா நோக்கி சென்ற அந்த பஸ்சில் சுமார் 35 பேர் பயணம் செய்தனர். தீ பரவத் தொடங்கியதும் சிலர் ஜன்னல்கள் வழியாகக் குதித்து தப்பித்தாலும், சிலர் எரிந்துகொண்டிருந்த பஸ்சின் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்; காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என போலீசார் கூறினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.