உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் காரணமாக பாகிஸ்தானுக்கு “தூக்கமில்லா இரவுகள்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, அலிகர், கான்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், மாநிலத்தில் குறிப்பாக அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே-203 ரக துப்பாக்கிகள் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா பொருளாதாரத்தை வலுப்படுத்தி, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார கொள்கைகளே காரணம் எனவும் அமித் ஷா தெரிவித்தார். பல நாடுகளுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்றுமதி திறனை உயர்த்தியுள்ளன என்றும், முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.





