ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தால் இறுதியில் யார் பயனடைவார்கள் என்பதைத் தீர்மானிப்பதில், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் பேசிய அவர், இதுவரை நாம் கண்டிராத அளவிலான மாற்றத்தை ஏஐ கொண்டு வருவதாகக் கூறினார். இதன் ஆபத்துகள் குறித்து முன்பே எழுதியுள்ளேன்; அவற்றை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அபாயங்கள் இருந்தாலும், சரியான முறையில் பயன்படுத்தினால் ஏஐ மிகப் பயனுள்ளதாக அமையும் என்றார்.
ஏஐயின் பலன்கள் நகரங்களுக்கு மட்டுமல்லாமல் கிராமங்களுக்கும் சென்றடைய இந்தியாவுக்கு “நல்ல வாய்ப்பு” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வலுவான அடித்தளமாக இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், ஏஐ ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் உள்ளூர் மொழிகள், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுத் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றார். விவசாயிகள் தங்கள் சொந்த மொழியில் கேள்விகள் கேட்டு பயன்பெறும் மஹாராஷ்டிராவின் ‘MahaVISTAAR’ போன்ற சேவைகள் விவசாயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.





