செங்கல்பட்டு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நோக்கி, “ஊழல் செய்த கூட்டத்தை விடமாட்டோம்; இனிமேல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது” என்று முதல்வர் விஜய் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தங்கள் தரப்பு 108 இடங்களை வென்றும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதற்கு திமுக-அதிமுக இணைந்து செயல்பட்டதே காரணம் எனவும் குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக தற்போது திமுகவின் “கிளை கழகம்” போல மாறிவிட்டதாகவும் கூறினார்.

“அனுபவம்” என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்ற மனநிலையே பழைய கட்சிகளுக்கு இருப்பதாக விஜய் விமர்சித்தார். சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது; மக்கள் பணத்தைத் தொட முடியாது என்பதால் தான் தங்களை ஆட்சிக்கு வர விடாமல் திட்டமிட்டதாகவும் அவர் கூறினார்.

சட்டசபையில் ஊழல் குறித்து பேசும்போது ஆதாரம் கேட்பதும், ஆதாரம் காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபிக்கச் சொல்லுவதும், பின்னர் நீதிமன்றத்தில் உள்ள விஷயங்களை சட்டசபையில் பேசக்கூடாது என்று தடுப்பதும் திமுகவின் நோக்கமென அவர் குற்றம்சாட்டினார். இதனால் தான் தன்னை கத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

திமுக “மக்கள் காசை தொட்டதே இல்லை” என்று சொல்ல முடியுமா, இனிமேலும் தொடமாட்டோம் என்று உறுதி அளிக்க முடியுமா, அரசியலுக்கு முன்பும் பின்பும் உள்ள சொத்துக் கணக்கை காட்ட முடியுமா என்று விஜய் கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டாலின் தோற்றாலும் ஜெயித்தாலும் அவர் தன் “ஸ்வீட் அங்கிள்” என குறிப்பிட்டார்; திமுகவினரே தங்களுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என்று பேசத் தொடங்கியதாகவும் கூறினார்.