சென்னை: ‘ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி (85) மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் வீரமணியின் நெருங்கிய தோழி சாந்தி (61), அவரது கணவர் மகேந்திர சிம்மன் (63) மற்றும் உதவியாளர் கணேசன் (55) ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு முக்கிய ஆதாரங்களாக வீரமணியின் ரகசிய டைரி மற்றும் சிறுமிகள் மீது நடந்ததாக கூறப்படும் பாலியல் வன்முறையை பதிவு செய்த வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இவற்றின் அடிப்படையில் 3 நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் போலீசார் விடிய விடிய கடுமையான விசாரணை நடத்தினர்.

வீரமணி எத்தனை ஆண்டுகளாக அத்துமீறலில் ஈடுபட்டார், வீடியோக்களை வைத்து யாரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டதா என்பதுபோன்ற அம்சங்கள் குறித்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கே அழைத்து சென்று சாந்தியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.